விநாயகர் சதுர்த்தி பூஜை செய்யும் முறை
விநாயகர் வழிபாட்டு பலன்
வினைகளை போக்குபவர் விநாயகர். எந்தவொரு காரியத்தை தொடங்கினாலும் அது எவ்வித தடையும் இல்லாமல் முற்றுப்பெற விநாயகர் வழிபாட்டுடன் தொடங்குவது நமது வழக்கம். எந்த செயல்களை செய்யும் முன்பும் பிள்ளையார் சுழி போட்டுதான் ஆரம்பிக்கிறோம். கணபதியை வணங்கினால் காரியத்தடைகள் யாவும் நீங்கும். விக்ன விநாயகனை வணங்க வினை எதுவும் நெருங்காது.
ஸ்ரீமஹா விநாயகர் சதுர்த்தி
முழுமுதற் கடவுளான விநாயகரின் முக்கியமான திருவிழா விநாயகர் சதுர்த்தி ஆகும். ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியை விநாயகர் சதுர்த்தி என்று அழைக்கின்றோம். அன்றைய தினம் நாம் விரதமிருந்து முறையாக விநாயகரை வழிபட்டு அருகம்புல் மாலையிட்டு அவரைக் கொண்டாடி னால், நமக்கு எல்லாவிதமான நன்மைகளும் உண்டாகும்.
வீடுகள் மற்றும் கடைகளில் சிறிய அளவு மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை பூஜையறையில் வைத்து, கொழுக்கட்டை, சுண்டல், பொரி, பழங்கள் ஆகியவற்றை வைத்து பூஜை செய்யப்படுகிறது.
வழிபாடு செய்யும் முறை
வீட்டை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். வாசலில் மாவிலையைத் தோரணமாகக் கட்ட வேண்டும். பூஜையறையை நன்றாக சுத்தம் செய்து விளக்கு, பூஜை பொருட்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
பூஜையறையில் சிறியதொரு மனையை அமைத்து அதில் கோலமிட்டு வாழையிலையை வைத்து கொள்ளவும். வாழையிலையின் நுனியை வடக்குப் பார்த்தபடி வைப்பது சிறப்பு. பின் இலையின் மேல் பச்சரிசியை பரப்பி அதன் நடுவே விநாயகர் சிலையை வைக்க வேண்டும். விநாயகர் சிலையை உங்களுக்கு தகுந்தாற்போல் அழகுப்படுத்தி கொள்ளலாம்.
பிறகு விநாயகருக்கு பல வகையான மலர்கள் சூட்டி வழிபடலாம். பல வகையான பழங்களையும் விநாயகருக்கு படைக்கலாம். விநாயகருக்கு பிடித்த அருகம்புல் அல்லது எருக்கம்பூ மாலை செய்து அணிவிக்கலாம்.
விநாயகருக்கு மிகவும் பிடித்த மோதகம், கொழுக்கட்டை, சுண்டல், சர்க்கரை பொங்கல் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்க வேண்டும்.
வழிபட கிட்டும் நன்மைகள்:
விநாயகர் சதுர்த்தியை மிகவும் சிரத்தையுடன் கடைபிடிப்பவர்கள் சிறந்த கல்வி அறிவும், தெளிந்த ஞானமும், சிறந்த செல்வமும், பிள்ளைப்பேறும், துன்பங்கள் விலகி இன்பமும் பெறுவார்கள். காரிய அனுகூலமும் உண்டாகும். இடையூறு விலகும்.
பெரும் புகழுடன் சகல நோய்களும் நீங்கி, சகலகளுடன் வாழ்வார்கள். விநாயகர் விரதத்தை மேற்கொள்ள தடைகள் யாவும் நீங்கி நல்லன நடக்கும்.

Comments
Post a Comment